
அமுதம் 41
ஆதி சக்தியின் வார்த்தைகளை கவனிக்கத் தவறினான். அவன் சற்று யோசித்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருப்பான்.
சக்தியை கவனமாக இதே வீட்டில் வைத்திருக்கும் படி அந்த நிறுவன ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டு, பார்வதி பாட்டி, தமயந்தி, லட்சுமியை அழைத்து கொண்டு ஊட்டிக்கு விரைந்தான். அவனால் பூமாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூளை வேலை நிறுத்தம் செய்வது போல உணர்ந்தான்.
தாத்தாவின் பாதுகாப்பிற்கு நிறுவன ஆட்களையும், உதவிக்கு தனக்கு தெரிந்த சிலரையும் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஊட்டியை நோக்கி ஆவலாய் சென்று கொண்டிருந்தான்.
நவிலன் அவனை கைபேசியில் அழைக்க,
“சொல்லு நவி”
“நாளைக்கு காலையில் கோதையை வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க. நீ எப்ப டா வருவ? அவ முகத்தை பார்க்கவே கஷ்டமா இருக்கு ஆதி.”
“வந்துட்டே இருக்கேன் நவி.”
“ஆதி இப்போ அவனுங்களை பிடிக்கறதை விட நமக்கு கோதை தான் டா முக்கியம்.”
“புரியாம இல்ல நவி.. அகி அண்ணா உன்கிட்ட எல்லாம் சொன்னாரா?”
“இல்ல. நான் பாக்ட்ரி, எஸ்டேட்ன்னு அலஞ்சிட்டு அப்பப்போ கோதையை மட்டும் தான் போய் பாக்கறேன் ஆதி.”
“அவளுக்கு பாதுகாப்பு சரியா இருக்கு தானே?”
“டேய் ராகுல், இன்பா, பிரவீன், புவி, ஷ்யாம் யாருமே அவளை விட்டு நகர்றதே இல்ல. அகி அண்ணா வெளி வேலை பார்க்கிறார், அப்பா, மாமா எல்லாம் ஹாஸ்பிடல்கும் வீட்டுக்கும், ரிசார்ட்கும் அலையறாங்க. மதி, சுஜி, நர்மதா, வசு நாலுபேரும் அவளோட பேச்சு குடுத்துட்டே இருக்குங்க.
கீர்த்தியும் சுபாவும் வீட்டையும் அம்மாவையும் அருணா அண்ணியையும் பாத்துக்கறாங்க. டேய் இப்படி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே இல்ல டா. நானும் உங்களோட ஒருத்தனா இல்லையே வருத்தமா இருக்கு.”
“அறிவு கெட்டவனே! இதை பூமா முன்னாடி சொல்லாத. இப்போ இருக்கற நிலைமையில அடிக்க முடியாதுன்னு வேற ஏதாச்சும் பண்ணிட போறா. லூசு.”
“என்ன இருந்தாலும் பிரெண்ட்ஸ் தானே டா!”
“அதை விட பெரிய உறவு இருக்கா? கோவப்பட வைக்காத நவிலா.”
அவ்வளவு எளிதில் ஆதி நவிலா என்று அழைக்க மாட்டான். கோவம் அதிகமாக இருந்தால் மட்டுமே வெளி வரும் அழைப்பு அது. நவிலனுக்கு ஆதியின் சினம் புரிய,
“சாரி மச்சி.”
“வசு சின்னவ டா. இல்லனா உனக்கே கட்டிக்குடுத்து இப்படி யோசிக்கதான்னு சொல்லுவேன். புரிஞ்சுக்கோ நவிலா. நட்பு என்னைக்கும் பக்கத்துல துணையா இருக்கும். உறவும் இருக்கும் தான். ஆனால் சில நேரத்துல பொய்த்து போய்டும். மீனாட்சி அத்தை பண்ணின மாதிரி.”
“நீ அவங்களை மன்னிக்கலயா டா ஆதி?”
“அவங்களை நான் மன்னிச்சா அது என் பூமாவுக்கு நான் செய்யற துரோகம். என்னைக்கும் செய்ய மாட்டேன். பூமா மன்னிச்சாலும் என் உறவு அவர்களோடு தாமரை இலை தண்ணீரா தான் இருக்கும்.”
“அவங்களும் தினமும் வராங்க. கோதை தான் கண்டுக்க மாட்டேன்கிறா.”
“விடு” என்று பெருமூச்சு விட்டவன்,
“நான் நாளைக்கு காலைக்குள்ள அங்க இருப்பேன் நவி. பை.”
அவனின் நவி என்ற அழைப்பு அவன் கோவம் குறைந்ததை நவிலனுக்கு சொல்ல, தன் நண்பனின் அன்பில் என்றும் போல் அன்றும் மனம் நிறைந்தான்.
கட்டி வைக்கப்பட்டிருந்த சக்தி மனதில் நிறைய குழப்பங்கள்.. ‘இவன் எப்படி இப்படி மாறினான்? எப்படி என்னை ட்ரேஸ் பண்ணினான்? இவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சா மாதிரி இல்லயே! இருந்தா நம்மளை உயிரோட விட்டு போயிருக்க மாட்டான். இப்போ எப்படி தப்பிக்கறது?’ அவனுக்கு ஒன்றும் வழி கிடைக்கவில்லை. அங்கிருந்த நிறுவன ஆட்களிடம் கத்திக் கத்தி பேரம் பேசிப் பார்த்தான்..
“டேய், ஆளுக்கு பத்து லட்சம் தரேன் டா, என்னை வெளில விடுங்க டா.”
அவர்களோ அவனை நாலு அறை விட்டு சென்றனர்.
“இவனுக்கு வாயை பார்த்தியா? பத்து லட்சம் தரேன்னு சொல்றான் பாரு. இவன் கிட்ட பத்து பைசா வாங்கினா கூட நம்ம குடும்பமே அழிஞ்சு போய்டும்.”
“என்ன அண்ணே இப்படி சொல்றிங்க?”, என்றார் மற்றொருவர்.
“பின்ன என்னப்பா? இவன் கிட்ட இருக்கற காசு பூராவும் சின்ன பசங்களுக்கு பொடி வித்து சம்பாதிச்சது. அதுல எத்தனை பிள்ளைங்க செத்து போச்சோ? அந்த பாவப்பட்ட காச வாங்கினா நம்ம மட்டும் நல்லா இருப்போமா சொல்லு?” என்றார்.
அதுவரை இவனிடம் பணம் வாங்கலாமா என்று சபலம் எட்டி பார்த்த சிலர் கூட அவனை ஒரு முறை முறைத்துவிட்டு ஓங்கி ஒன்றை கன்னத்தில் கொடுத்து விட்டு வெளியேறினார்.
உலகில் பணத்திற்கு சபலப்படும் சிலர் கூட பழி பாவங்களுக்கு அஞ்சுவர், ஆனால் சக்தி போன்ற சிலருக்கு எதுவுமே துச்சம் தான்.
பூமாவை காண ஓடி வந்த ஆதி அவள் கண்களில் நீருடன் அவனுக்காக அறை வாசலையே பார்த்திருக்க கண்டு நெக்குருகி போனான்.
அவளை அள்ளி அணைக்க எழுந்த ஆவலை கடினப்பட்டு அடக்கி,
“பூமா” என்று அவள் உயிர்வரை தீண்டும் குரலில் அவன் அழைத்திட,
தன் வலக்கரத்தை அவனை நோக்கி நீட்டியவள், கண்ணீரை இமை தட்டி வெளியேற்றியபடி தலையசைத்து ‘வா’ என்றாள்.
மனையாளை மனம் நிறையக் கண்டவன் அவளிடம் கரம் கோர்க்க, அவள் விழிநீர் கரத்தினை நனைக்க, அவனோ அதில் கரைந்து போனான்.
“என்கிட்ட ஏன் அத்தான் சொல்லிட்டு போகல. நான் உன்னை ரொம்ப தேடினேன். போ.”
“பூமா.”
“புரியுது ஏதோ முக்கியமா இருக்க போய் தான் போயிருக்க. ஆனா நான் தான் உன்னை…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் போக அவன் கைகளை தன் கன்னத்தில் பொருத்தி அவன் கரங்களில் அவள் இதழ் சின்னங்களை பதித்தாள்.
அவள் உச்சியில் அவன் முத்தமிட அவன் கண்ணீர் அவள் முன் நெற்றில் பட்டுத் தெறித்தது.
இந்த காட்சியை இன்பா கண்ணீருடன் அவன் போனில் பதிந்து கொண்டான். அவன் மட்டும் அல்ல அங்கே அறை வாசலில் இவர்களின் நிலையை பார்த்த அத்தனை கண்களிலும் நீர் சுரந்தது.
என்ன மாதிரியான காதல் அது. முத்தம் கூட பார்ப்பவரை உறுத்தாத வகையில் அன்பால் நிறைந்ததாக காண்போரையும் கரைக்கும் விதமான காதலை வெளிப்படுத்த இவர்களால் எப்படி முடிகிறது என்று வியந்து போயினர்..
மற்றவர் வரவை கண்டவர்கள் சற்று இடைவெளியில் நகர, சென்னை பயணத்தின் நோக்கமும் அங்கே நடந்தவைகளையும் ஆதி அனைவரிடமும் விளங்கினான்.
“அந்த சக்தியை அப்படியேவா விட்டிங்க அண்ணா?”,என்று கோதையின் நண்பர்கள் கேட்க,
“அவனை வைத்து தானே டா அவர்கள் தலைவனை பிடிக்கணும்” என்று ஆதிக்காக பேசினாள் கோதை.
அப்போது அங்கு வந்த சுந்தர், “என்னப்பா நீ அவனை பிடித்தால் போலீசிடம் ஒப்படடைக்காமல் இப்படி நீங்களே மறைத்து வைப்பது சரியா?”
“உங்க போலீஸ் தான் அவனுக்கு உதவினதே. அவங்க கிட்டயே சக்தியை ஒப்படைக்க என் புருஷனுக்கு என்ன மத்தவங்களை போல மேல் மாடி காலியாவா இருக்கு?” என்று கோதையின் கோவம் கலந்த நக்கல் பேச்சு அதன் பின் அவரைப் பேச விடவில்லை.
அடுத்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, இரண்டு நாட்கள் போவது தெரியாமல் போனது.
தாத்தாவிடமிருந்து தகவல் வராது போக, அவரை அழைத்து ஆதி நலம் விசாரித்தான்..
“ஈஸ்வரா.. எனக்கு இன்னும் நாலு பேரு துணைக்கு வேணும். ஏற்பாடு பண்ணு பா..”
“ஏன் தாத்தா?”
“இல்லை வங்கியில் பணம் போட இப்போ முடியாது. கையில் கொண்டு வர போறேன். ஆள் துணை இருக்கட்டும்.”
“சரி தாத்தா. சீக்கிரம் வாங்க. மூர்த்தி தாத்தாவும் உங்களை எதிர்பார்த்திருக்கார்.”
“அவனை நான் நேரில் பார்த்து பதினைந்து வருஷம் ஆகுது. ம்ம்ம்… வரேன்.”
“சரி தாத்தா.’
வீட்டில் கோதையை லட்சுமி பார்த்துக்கொள்ள, தமயந்தி மருமகளோடு வசந்த இல்லத்தில் இருந்து கொண்டார்..
பாட்டிக்கு ஒரே குழப்பம் எங்கே தங்குவது என்று. கோதை சொல்லிவிட்டாள்,
“பாட்டி, இங்க மலை சரிவுக்கு பக்கத்தில வீடு, ஆனா வசந்த இல்லம் அப்படி இல்லை, ஊருக்குள்ள இருக்கு. அதனால நீயும் பெரியத்தை கூட அங்கேயே இரு.”
“நீயும் அங்க வா கோதை. உடம்பு சரியானதும் இங்கே வரலாம்.”
“இல்ல பாட்டி அவரால நான் இல்லாம இருக்க முடியாது. அங்க இருந்தா ஆள் மாத்தி ஆள் என்னோட இருப்பாங்க. அவரால என்னோட சரியா பேச முடியாது.”
“ம்ம். புருஷனை பத்தி மட்டுமே நினைக்கற…”
“ஆமா, அவர் மட்டும் தானே என்னை பத்தி நினைச்சார்… அன்னைக்கு…”
அவளின் வார்த்தையில் இருந்த வலி புரிந்த பாட்டி அவளை தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு வசந்த இல்லத்திற்கு சென்றார்.
அந்த நிகழ்வை மறக்க நினைக்கும் கோதைக்கு மீனாட்சியின் வரவு, அதை ஆறாத ரணமாய் மாற்றி இருந்தது.
அவள் மீனாட்சி வருவதோ தன்னிடம் பேச நினைப்பதோ, அவளுக்கு பிடிக்க வில்லை.
ஆனால் அதை சொல்லவும் அவள் விரும்பவில்லை. அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அது மீனாட்சி வரும் நேரம், அவள் உள்ளே கனன்று கொண்டிருந்த நெருப்பை விழுங்கிக்கொண்டாள். வீட்டுக்கு வராதே என்றோ இல்லை அவர்கள் அன்று முகத்தில் அறைந்தது போல் பேசியதை போல அவளால் பேச முடியாது. அவளின் உள்ளதை நிதானித்தபடியே இருந்தாள்.
ஆதி அன்று கோவையில் இருக்கும் தாத்தாவின் தொழிற்சாலை ஆட்களை வரச் சொல்லி இருந்தான். அவர்களை பார்த்துவிட்டு வீட்டில் நுழைந்தவன் கண்களில் பட்டது, தன்னை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அவனின் பூமாதான்.. அவனால் அவன் மனைவியின் இந்த நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் வலிக்கான காரணத்தை அவளின் கண்கள் மூலம் அறிந்தவன், வீட்டிற்குள் நுழைந்த மீனாட்சியை அக்னிக்கண் கொண்டு பார்த்தான். அவனை அவ்வளவு கோவத்தினை பார்த்திராத மீனாட்சி வாசலிலேயே நிற்க,
“ஒரு காயத்தை ஆறவிடும் நேரம் கூட என் பூமாவுக்கு கிடைக்காதா? உங்களுக்குத்தான் அது தெரியாதா? யோசிக்காமல் பேசினீகன்னு பார்த்தா இப்போ உங்க செயல்களும் யோசனை இல்லாமலே இருக்கு. நீங்க தவறை உணர்ந்ததும் நாங்க மன்னிச்சு அணைச்சுக்கணுமா? அப்போ உங்க மேல எங்களோட காயங்களின் ஈரமும், ரத்தமும் படுமே! அதற்காகவாவது கொஞ்சம் நிதானிக்க கூடாதா?” என்றான்.
மீனாட்சி பதில் பேசாது வெளியேறினார்.
கோதை மெதுவாய் எழுந்து வந்து ஆதியை அணைத்துக்கொண்டாள். அவளின் அணைப்பில் ஒரு நிம்மதி இருந்தது. அது ஆதியின் கோவத்தை குறைத்தது. மெதுவாய் அவளின் முதுகில் தடவியவன்,
“பூமா. சாரி.”
“எதுக்கு?”
“உங்க அம்மாவை அப்படி பேசிட்டேன்.”
“நான் பேசக்கூடாது என்று இருந்தேன். பேசி இருந்தால் இவ்வளவு அழகாய் சொல்லி இருப்பானோ என்னவோ? அத்தான். உங்களுக்கு இந்த கம்பீரமும் மிடுக்கும் ரொம்ப பொருத்தமாய் இருக்கு. அதனால எப்பயும் இப்படியே இருக்கணும். சரியா?”
“உனக்காக எதுவும்.. பூமா..”
ஆதியின் கண்களில் எல்லையில்லா காதல் தெரிந்தது. அதன் அடி ஆழம் வரை பூமா எனும் தேவதை நிறைந்து இருந்தாள்.

😍😍😍😍😍👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕
Super👌👌