
அமுதம் 40
சென்னையை நோக்கிய ஆதியின் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. அவன் யோசிக்க, செயல்படுத்த, அவ்வளவு விஷயங்கள் இருந்தது சென்னையில்!
முகிலன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் சென்னையில் மட்டுமே இருந்தான். கோதைக்காக ஊட்டிக்கும் தலைமறைவாக கோவைக்கும் வந்திருக்கிறான். அதனால் கண்டிப்பாக மீண்டும் சென்னை தான் சென்றிருப்பான் என்பதில் ஆதிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதனால் அங்கு அவனின் ஆட்கள் பலரை பல பகுதிகளுக்கு அனுப்பி தேடச் சொல்லிவிட்டு இவனும் சென்னை சென்று கொண்டிருந்தான்.
ஆதி சென்னை சென்று கொண்டிருக்கும் வேளையில் அவனுக்கே தெரியாமல் அவனுடைய பூமாவிற்கு ஆபத்தை விளைவித்து கொண்டிருந்தார் ஒருவர்.
அது வேறு யாரும் இல்லை. அன்னம் தான். அன்னம் போன்ற பெண்கள் குடும்பம் ‘ஒன்றாக’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர ‘நன்றாக’ இருக்க வேண்டும் என்று கவனமாக இருப்பதில்லை. அன்னம் ஷ்யாமிடமும் அகிலனிடமும்,
இந்த பிரச்னையில் நீலா இருப்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளைக்கு கேஸ் வந்தா குடும்ப மானம் போய் விடும் என்று நீலாவை நல்லவள் வேஷத்தில் அனைவர் கண் முன்னால் விட்டுவிட்டார். இது எவ்வளவு கொடிய நிகழ்வின் ஆரம்பம் என்பதை அவர் அறியவில்லை.
ஷியாமும் அகிலனும் அவரை எதிரித்துப் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர். எப்படியும் நீலா இங்கே இல்லை. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த நிமிட பிரச்சனையை கவனிக்க விழைந்தனர்.
ஆதி கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து கொண்டிருந்தான். அவனை அங்கு ஒரு சிலருக்கு தெரிந்திருந்தது. பழைய வழக்கில் இவன் இருந்ததும், சுந்தர் மருமகன் என்றும் அறிந்திருந்தனர்.
அவன் அனுமதி கோரி உள்ளே நுழைந்தான். அங்கே வேறு ஒருவர் கமிஷனராக இருந்தார். அதை பற்றி ஆதி கவலைப்படவில்லை.
“சார். என் பேர் ஆதிலிங்கேஸ்வரன். ஊட்டில நடந்த பிரச்சனையை தொடர்ந்து கோயம்புத்தூர்லையும் அந்த கடத்தல் கும்பலால் தொல்லைகள் இருந்தது. அவங்க இப்ப சென்னையில் இருக்கலாம் என்று நான் சந்தேகப்படறேன். அது விஷயமா கம்பிளைன்ட் கொடுக்க வந்திருக்கேன்.”
“அதெல்லாம் இங்க கம்பிளைன்ட் எடுக்க முடியாது. நீ பாட்டுக்கு கடத்தல், கும்பல், தொல்லைன்னு பேசுற. அவங்க யாருன்னு தெரியுமா? யார் மேல கம்பிளைன்ட் தருவ? தந்துட்டு நீ நல்லபடியா இருந்துருவியா? இப்போவே தொல்லைன்னு சொல்ற அப்பறம் வேதனை ஆகிட போகுது. கிளம்பு…”
‘ஆக இந்த ஆளும் அவர்களின் கையாள்.’ என்று மனதில் நினைத்தவன். இதுவரை இருந்த பொறுமையும் அமைதியையும் கைவிட்டு,
“ஓஹ்! நீங்க அப்படி வர்றிங்களா சார்? ஒரு நிமிஷம்.” என்று தன் செல்போன் எடுத்து சில செய்திகளை அனுப்பிவிட்டு,
“நீங்க சொல்றது சரி தான். ஆனா அவங்க சென்னைல இருந்து ஊட்டி போய் கடத்தல் வேலை பார்த்து, மறுபடி மாட்டி. இவ்வளவும் நடந்திருக்கே! இதுல மாட்டின ஒரு அடியாள் கூடவா அவன் யாருன்னு சொல்ல மாட்டான்? இல்ல நீங்க இப்போ நான் கேட்டா அவன் யாருன்னு சொல்லிட மாட்டீங்களா என்ன?” என்றான் கடைசி வரியை கர்ஜனை குரலில்,
இவனின் இந்த ரூபத்தை அறிந்திடாத புதிய கமிஷனர் ஒரு நிமிடம் விக்கித்து போனார்.
“ஏய்! யார்ட்ட பேசுற தெரியுமா? சிட்டி கமிஷனர் டா நான்.”
“சிட்டி கமிஷனர் இல்ல, சீட்டிங் கமிஷனர். கொஞ்சம் உங்க வாட்சாப் பாருங்க.”
அதில் அந்த கமிஷனர் அகவுண்டில் புதிதாக சில மாதங்களாக விழுகும் பல லட்சங்கள், இவரின் செல்போன் உரையாடல் போன்ற ஆதாரங்கள் இருக்க அவர் வெலவெலத்துப் போனார்.
அவர் ஆதி அந்த அளவுக்கு இறங்குவான் என்று எதிர்பார்க்க வில்லை.
“சார்! என்ன சார்? இதெல்லாம் உங்களுக்கு எப்படி?”
“ஏன் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம தப்பு செய்யற அவனுக்கே உதவ உங்களை மாதிரி ஆளுங்க இருக்கும் போது, உண்மைக்கு போராடணும்னு நினைக்கும் எங்களுக்கு உதவ ஆள் இருக்காதா? அதே போல, காசுக்காக நீங்க மக்களுக்கு துரோகம் செய்யும் போது, அதே காசுக்காக வேற ஒருத்தன் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டானா?”
“சார்!”
“இங்க பாருங்க. இந்த கடத்தலுக்கு பின்னாடி எவனோ பெருசா இருக்கான்னு எனக்கும் தெரியும். அதே அளவுக்கு நாங்களும் இறங்குவோம் புரியுதா? என் மனைவியை வெட்டினவன நான் சும்மா விட்ருவேன்னு அவன் நினைச்சானா? எனக்கு இப்போ அவன் யாருன்னு தெரியணும். இல்லன்னா நடக்கறத உங்களால தடுக்க முடியாது. இந்த ஆதாரம் முழுக்க சி.எம் செல்லுக்கும் மீடியாவுக்கும் போய்டும்.”
அவனின் மிரட்டல் வேலை செய்தது.
“சார், இதை யார் செய்யறாங்கன்னு எனக்கு தெரியாது சார். ஆனா, எங்களை போல எல்லாருக்கும் ஆர்டர் சக்தி மூலமா தான் வரும். அவனுக்கும் மேல ஒருத்தர் இருக்காங்க. லாயர் சக்தி தான் நீங்க இங்க வந்தா எதுவும் கேக்காம திருப்பி அனுப்பணும்ன்னு சொன்னது.”
‘சக்தி’ ஆதி மனதில் அந்த சக்தியை எப்படி பார்ப்பது என்று ஓடிக்கொண்டு இருந்தது. இது தெரியாமல் கமிஷனர் கெஞ்சிக்கொண்டே இருந்தார்.
அவன் சக்தியை சந்தித்தபோது அவனுக்கு ஏதோ உறுத்தலாக பரிச்சயமான உணர்வு வந்ததே என்று அவன் அதை நினைத்துக்கொண்டு, “எனக்கு அவனை பார்க்கணும். நான் தான் சொன்னேன்ன்னு சொல்லாம அவனை நான் சொல்ற இடத்துக்கு நீங்களா கூப்பிட்ட மாதிரி கூப்பிடுங்க. வேற பிளான் போட்டிங்கன்னா அப்பறம்…”, என்று அவன் தன் செல்போனை ஆட்ட,
அவரோ “இல்ல சார். கண்டிப்பா இன்னிக்கு அவரை வர சொல்லி கூப்பிடுறேன் சார். இதை…” என்று அவர் செல்போனைக் காட்ட.
“நீங்க ஒழுங்கா இருக்கற வரைக்கும் இதுவும் அமைதியா என்கிட்டயே இருக்கும். இது என் போன்லயே இருக்கறதும் சி.எம்.செல்லுக்கு போறதும் உங்க கைல தான் இருக்கு.” அழுத்தமான அவன் குரலே ‘நீ சரியல்லனா இல்லாம போய்டுவ’, என்று அவருக்கு உணர்த்த,
“சரி சார்.”, என்று சக்தியை அழைக்க வர வேண்டிய இடம் பற்றிய தகவல்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆதி அங்கிருந்து நேராக ஜோதிலிங்கம் தாத்தாவைப் பார்க்க போனான்.
“தாத்தா. இங்க நீங்க தனியா இருக்கறது எனக்கு சரியா படல. நீங்க அங்க என்கிட்ட வாங்க. இந்த பிரச்சனை முடியறவரைக்கும் நீங்க என்னோட இருந்தா நல்லா இருக்கும்.”
“எனக்கு மட்டும் இங்கே தனியா இருக்க ஆசையா ஈஸ்வரா? வரேன் பா. ஆனா நிலம் நீச்செல்லாம் அப்படியே போட்டு வர முடியாதே பா. வீடுன்னா பூட்டு போட்டுட்டு வரலாம். பயிறு பச்சையை விட்டு வர மனசு வரலேயே ஈஸ்வரா.”
“உண்மை தான் தாத்தா. சரி எல்லாத்தையும் ஆறு மாச குத்தகைக்குக் கொடுப்போம். காசு முக்கியம் இல்ல..பாதுகாப்பு தான் முக்கியம். செடிக்கொடியோட தோட்டம் தொறவு நல்லா இருந்தா அதுவே போதும்.”
“அவங்க ரெண்டு பேரும் அங்க வந்துட்டாங்களே எங்க இருக்காங்க.”
“நம்ம வீட்ல இல்ல தாத்தா. மாமாவும் சித்தப்பாவும் தங்கி இருக்கற எடத்துல தன் இருக்காங்க. இப்போ நீங்க பாட்டி, தமயாம்மா, லச்சும்மா எல்லாரும் அங்க நம்ம வீட்ல இருங்க. பூமா நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவா. நீங்க எல்லாரும் அவளோட இருந்தா நானும் கொஞ்சம் நிம்மதியா அந்த பிரச்சனை, தொழில்ன்னு பார்க்க போவேன்.”
“ம்ம். எனக்கு ஒரு வாரம் தேவை ஈஸ்வரா. நான் பாத்துட்டு வரேன். நீ பொம்பளைங்க மூணு பேரையும் கூட்டிப்போ.”
“என்னால இப்போ ஊட்டி போக முடியாது தாத்தா. எனக்கும் ரெண்டு நாள் வேலை இருக்கு. நீங்க அவங்கள தயாரா இருக்க சொல்லுங்க. நான் கிளம்பும் போது கூட்டிட்டு போறேன்.”
“ஈஸ்வரா.”
“சொல்லுங்க தாத்தா.”
“உன் முகமே மாறி போச்சே! அன்பா கருணையா இருந்த கண்ணு இப்படி கோவமா வெறியோடு பாக்கவே கஷ்டமா இருக்கு ஈஸ்வரா.”
“தாத்தா. அன்னைக்கு இதே கையால ரத்தம் சொட்ட சொட்ட என் பூமாவை தூங்கிட்டு போனேன் தாத்தா. என்னைக்கு இதே கையால அந்த நாய்களை அடிச்சு கொன்னு போடறேனோ அன்னைக்கு தான் என் கோபமும் வெறியும் அடங்கும்.”
சொல்லும் ஆதியின் கண்களில் தெரிந்த ரௌத்திரம் ஜோதிலிங்கம் தாத்தா இதற்கு முன் ஆதியின் தாத்தா ஈஸ்வரமூர்த்தியிடம் இதில் பாதியைப் பார்த்திருக்கிறார்.
ஜோதிலிங்கம் தாத்தாவும் ஈஸ்வரமூர்த்தி தாத்தாவும் பால்ய நண்பர்கள். உறவாகத் தொடர நினைத்து தான் காமாட்சியை மகேஸ்வரனுக்கு கொடுத்தது. மகேஸ்வரனும் மிடுக்குடன், அம்சமாய் இருப்பார். அவரின் கம்பீரம் கோவையே பேசும் அளவுக்கு இருக்கும் அந்த நாட்களில். அப்படிப்பட்டவர் மனைவியின் பழிச்சொல்லால் கவலைப்பட, அவரை காமாட்சி நிர்பந்தப்படுத்தி நீலாவை திருமணம் செய்து வைக்கவும் மிகவும் உடைந்து போய் , நீலாவின் செயல்களால் வெறுத்து, கம்பீரத்தை தொலைத்து, அமைதியாக, அவரின் நிலை பார்த்தே ஈஸ்வரமூர்த்தி தாத்தா படுத்தப்படுக்கையாகிப் போனார்.
ஆதி அவ்வளவு இனிமயனவனாக இருப்பதை பார்த்த ஜோதிலிங்கம் தாத்தா ஈஸ்வரமூர்த்தியின் கம்பீரம் மட்டும் இவனிடம் இருந்தால், மகேஸ்வரனை விட ஆதி மிடுக்குடன் இருப்பான் என்று போன முறை ஆதியைப் பார்த்த போது நினைத்தார். ஆனால் இன்று ஆதியின் கம்பீரமும் மிடுக்கும் அவனை ஒரு ராஜாதிராஜனின் நிமிர்வை கொடுத்திருக்க தாத்தா அசந்து போனார். ஆனால் அவன் கண்ணில் தெரியும் வெறி அவரை அவனை நினைத்து கவலை கொள்ள வைத்தது.
தாத்தாவிடம் பேசிவிட்டு, கமிஷனரை தொடர்பு கொண்ட ஆதி நிலவரங்களைத் தெரிந்துகொண்டு, தன் நிறுவன ஆட்களை சந்தித்து முகிலனைப் பற்றியும் கேட்டுக் கொண்டான்.
அப்போதுதான் ஆதி தான் ஒருவரை மறந்து போனதை நினைவு கொண்டான். இந்திரன். இந்திரனைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லையே! ஊருக்கு அவர்கள் நால்வர் தானே வந்தனர். இத்திரன் அப்பா எங்கே? உடனே அவர்கள் வீட்டிற்கு போக வீடு பூட்டிக்கிடந்தது.
சுந்தரைத் தொடர்புகொண்டு கேட்க, அவரோ போன மாதமே அவர் சிவஸ்தல யாத்திரைக்கு சென்றதாகச் சொல்ல, அதனை ஆதியால் நம்ப முடியவில்லை. மேலும் விவரங்கள் கேட்டவன், நிறுவன ஆட்களுடன் பேசி சில கட்டளைகளை பிறப்பித்தான். இதையெல்லாம் முடிக்கும் போது அவன் வயறு அவனை பார்த்து, ‘நீ மாறலாம், ஆனால் பசி மறந்தது போல நான் மாற முடியுமா? ஏதாவது ஈயுங்கள்…’ என்றது.
எதையோ ஒன்றை வயிறுக்குக் கொடுத்தவன், பூமாவிடம் பேச எழுந்த ஆசையை அடக்கினான். அவனால் அவள் குரல் கேட்ட பின் ஒரு நொடி கூட அவளைப் பிரிந்திட முடியாது என்பதை அவன் அறிந்ததால் அமைதியாக அகிலனிடம் அவள் நலம் விசாரித்தான். அம்மா ஊட்டியை அடைந்துவிட்டார்களா என்று அவன் கேட்க நீலாவை பற்றி அன்னம் சொன்னதை அகிலன் சொன்னான்.
“இவங்களைத் திருத்தவே முடியாதா அண்ணா? அன்னைக்கே பூமா சொன்னா, எல்லாத்தையும் மூடி மூடி வைக்காதிங்க அத்தம்மான்னு. இவங்க பட்டாலும் மாறமாட்டேன்ன்னு சொன்னா எப்படி அண்ணா?” என்று கோபத்தில் கத்தினான்.
“எனக்கு புரியுது ஆதி. ஆனா அவங்க ரொம்ப காயப்பட்டிருக்காங்க. இப்போ நாம அவங்க பேச்சை கேக்கலன்னா மதிக்காம போய்ட்டோம்ன்னு நினைப்பு வரும். அது அவங்க உடம்புக்கு நல்லதில்லை.”
“சரி அண்ணா. பூமா கிட்ட நான் சொல்லிடுவேன்.”
“நானும் அருணா கிட்ட சொல்லிடுவேன் டா”, என்று சொல்ல, சற்றே இறுக்கம் தளர்ந்து இருவரும் சிரித்தனர்.
மாலை அந்த இடத்தைப் பார்த்த சக்திக்கு ‘கமிஷனர் ஏன் இங்க வர சொல்லணும்?’ என்ற கேள்வி எழவே செய்தது. ஆனால் ஆதியை மடக்கும் வழியும் அதற்கான வாய்ப்பும் இருப்பதாய் சொன்னதால் மற்றவைகளை ஒதுக்கி அவன், அவர் சொன்ன இடத்திற்கு வந்தான்.
அவனை அங்கு கண்காணித்துக்கொண்டிருந்த ஆதிக்கு அன்று அவனை சந்திக்கச் சென்ற இடத்தில் தனக்கு ஏற்பட்ட பரிச்சயமான உணர்வுக்கு அவனின் வெளிநாட்டு கார் தான் காரணம் என்று இப்போது அவனைப் பார்த்ததும் புரிந்தது.
இந்த காரில் தானே அவன் அந்த சொகுசு பங்களாவில் இருந்து குடோனுக்கு வந்தான். அங்கிருந்து தப்பி சென்றதும் இதே காரில் தானே! அன்று அவன் பூமா இந்த காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக நினைத்து தானே கதறினான். அவன் காதலை உணர்ந்ததும் அந்த காரில் அவன் கண்மணி கடத்தப்பட்டாளோ என்ற பயத்தால் தானே!
ஆக, அன்று சொகுசு பங்களாவில் இருந்தது சக்தி தான். ஆனால் இவனே கையாள் என்றால் இவனின் தலைவன் யாரோ? என்று ஆயிரம் யோசனைகளை சுமந்தவன் அடுத்த பத்து நிமிடத்தில் அவன் கையால் சக்தியை வெறி கொண்டு அடித்துக்கொண்டிருந்தான்.
அந்த அழகிய ஈ.சி.ஆர். பங்களாவில் ஒரு அறையில் சக்தி ஆதியின் ஆட்களால் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.
“உன் தலைவன் யாருன்னு சொல்லு. தேவையில்லாம இந்த உயிரை விட்டுடாத.”
அவன் வாயே திறக்கவில்லை..
கடைசியாக வாய் திறந்தவன் “என்ன செய்தாலும் அவரை உன்னால ஒன்னும் செய்ய முடியாது. உன் கைக்கு எட்டும் தொலைவில் அவர் இல்ல” என்றான் அலட்சியமாய்.
ஆதிக்கு அந்த வழி அடைபட்டது போல ஓர் உணர்வு வந்தது.

Interesting
thank u
Sakthikku me la oruthana?