Amudham 38

Amudham38

சுந்தருக்கு மனமெல்லாம் எரிந்தது. ‘அப்பா அப்பா’ என்று தன்னை சுற்றி சுற்றி வந்த பெண், இன்று தன்னை அந்நியன் போல ஒதுக்குவது அவருக்கு வலித்தது. குடும்பத்தில் ஒருவனே ஆனாலும் முகிலன் சொன்னதை நம்பியிருக்க கூடாது. என்ன செய்யலாம்? அன்று விதி அப்படி அமைந்துவிட்டது. இல்லையென்றால் தோழியாய் தாங்கும் மீனாட்சி கோதையை அப்படி நினைத்திருப்பாளா? இல்லை அவளே சொல்லியிருந்தாலும் நான் கேட்டிருப்பேனா?

எல்லாம் தலையெழுத்து என்று நொந்து கொண்டவர், கோதை தன்னிடம் கேட்ட கேள்விகளை அசை போட்டார்..

அதெப்படி நான் யோசிக்காமல் போனேன்? என்று அவருள்ளே அவர் கேட்க, ‘நீ ஒழுங்கா யோசிச்சு நாளாச்சு’ என்ற பதில் வந்தது.

கசந்த முறுவலை தனக்கே தந்தவர். இப்போதாவது சரியாக யோசிப்போம் என்று யோசிக்கத் தொடங்கினார்.

அவள் கேட்ட முதல் கேள்வி, அந்த கடத்தல்காரன் மலைவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைப்பதன் நோக்கம் என்ன? அடுத்து அப்படி அவர்கள் அங்கிருந்து போய் விட்டால் அதனால் அவனுக்கு என்ன லாபம்?

இந்த நான்கு நாளில் அதை அவர் யோசிக்கவே இல்லயே! அடுத்தடுத்து சில போன் கால்களுக்குப் பின் அமைதியாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தார்.

அப்போது கதிர், மீனாட்சி, காமாட்சி மூவரும் வந்தனர். கோதையின் நிலை அறிந்துகொண்ட மூவரும், அவளை பார்க்கச் செல்வதா வேண்டாமா என்ற யோசனையில் நிற்க, புவியிடம் பேசியபடி வந்துகொண்டிருந்த மகேஸ்வரன் இவர்களை கண்டதும் ஆணி அடித்தாற்போல நின்றார்.

முன்னே சென்றுவிட்ட புவி பேசிக்கொண்டே வந்த அப்பாவை காணவில்லை என்றதும் பதட்டத்துடன் பின்னால் பார்க்க, அவரோ எங்கோ நிலைகுத்திய கண்களுடன் நிற்பதை பார்த்து பயந்து போனான் புவி.

“அப்பா, அப்பா” என்று அவன் உலுக்க, சுயநினைவுக்கு வந்த மகேஸ்வரன் அவன் கைகளை பிடித்துக்கொண்டு வேகமாய் கோதையின் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவரின் மனம் நிலையில்லாமல் தவித்தது. காமாட்சியைக் கண்ட நொடி, அவளோடு வாழ்ந்த நாட்கள் வந்து போக, கடைசி நாளில் அவள் செய்த செயல் அவருக்கு இன்றும் தலைவேதனையாய் தன்னுடனே, தன் வீட்டில், தன்னை அந்நியனாய் உணர வைக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் வியர்த்துகொட்ட, கண்கள் சொருகி மகேஸ்வரன் மயங்கிச் சரிந்தார்.

வந்ததில் இருந்து அவர் முகபாவங்களை பார்த்திருந்த கோதை அவர் மயங்கவும் “புவனேஷ்” என்று கத்தினாள். அவளுக்கு பழச்சாறு தயாரித்தபடி இருந்த புவனேஷ், அவளுக்கு தான் ஏதோ என்று பதறி,

“அக்கா” என்று அலறிட,

அவன் குரல் கேட்டு சுந்தர், கதிர், மீனாட்சி, காமாட்சி நால்வரும் உள்ளே வந்தனர்.

கோதையால் நகர முடியாது போக, அவள், “புவனேஷ் அப்பா டா..” என்றாள் மகேஸ்வரனைக் காட்டி..

அப்போது தான் அவரைக் கண்ட புவி “அப்பா” என்று அவரை தூக்கி, அங்கிருந்த அட்டெண்டெர் கட்டிலில் படுக்க வைத்தான். அதற்குள் கோதை ரூமிலிருந்து நர்ஸ் ஸ்டேஷனுக்கு அழைப்பு மணியை அழுத்த, அங்கிருந்த இரு நர்ஸ்களும் ஓடி வந்தனர். அடுத்த பத்து நிமிடம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

ஆதியும், அகிலனுக்கு ஏதோ பேசியபடி வர, கோதை அறையில் மருத்துவரும் நர்ஸும் போவதை பார்த்து பயந்து ஓடி வந்தனர். ஆதிக்கு முதலில் கண்ணில் பட்டது காமாட்சி தான். இடம் பொருள் பார்க்காமல் கத்த தொடங்கிவிட்டான்.

“உங்களுக்கு அறிவே இல்லையா? இப்போ தான் கொஞ்ச நாளா நாங்க நிம்மதியா இருக்கோம். உங்களை யாரு இங்க வர சொன்னது? என் மாமா வர்றதுக்கு முன்னாடி கிளம்புங்க இங்கிருந்து. அவர் உங்களை பார்த்துட்டா ரொம்ப சிக்கலாய்டும். அவருக்கு ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. சீக்கிரம் போங்க.” என்று கத்தினான்.

“அத்தான் என்ன சொல்றிங்க? அப்பாக்கு ஏற்கனவே அட்டாக் வந்திருக்கா? அப்போ அப்பாக்கு இப்போ ஹார்ட் அட்டாக்கா டாக்டர்? ” என்று புவனேஷ் டாக்டரை பார்த்து அலற அவரோ,

‘நோ டென்ஷன் மிஸ்டர். இப்போ அவருக்கு அட்டாக் எல்லாம் இல்ல. ஹை பி. பி தான் ஷூட் ஆகிருக்கு. மயக்கம் தான். ஹீ வில் பி ஃபைன் சூன்.”

அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மருத்துவர் வெளியேற, அப்போது தான் தன் மாமாவின் நிலை கண்ட ஆதி அவரின் கையைப் பிடித்துக்கொண்டு,

“இன்னும் எவ்வளவு தான் மாமா நீங்க அனுபவிக்கணும்? உங்களுக்கு விடியவே விடியாதா?” என்று அழுக, அவன் அழுவதை தாங்க முடியாத கோதை “அப்படி என்ன தான் ஆச்சு அத்தான்? அப்பா மேல தப்பில்லைன்னா நிரூபிச்சிருக்கலாமே? ஏன் இப்படி?”

“ஒரு பொண்ணுக்கு தப்பு நடந்தா டெஸ்ட் எடுத்து நிரூபிக்கலாம். ஆனா அதை கூட ஒத்துக்காத உன் சித்தி மாதிரி ஆளுங்களை என்ன செய்ய? சொல்லு பூமா!

அன்னைக்கு மட்டும் மாமா சொன்ன வார்த்தையை இவங்க நம்பிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? புவி அம்மான்னு ஒருத்தரை வெறுத்திருப்பனா? எனக்கு அம்மா கூட வாழ முடியாம போயிருக்குமா? என் அப்பா ஊரூரா அலைஞ்சிருப்பாரா? இல்ல மாமாக்கு தான் அப்போவே ஹார்ட் அட்டாக் வந்து என்னவேனா நடக்கலாம்ன்னு என் அம்மா அவங்க வீட்டை விட்டுட்டு மாமா கூடவே இருந்திருப்பாங்களா?”

கோதை முடிந்தவரை அசங்காமல் படுக்கையை விட்டு எழுந்தாள். ஆதிக்கு அருகில் வந்தவள்,

“சொல்லுங்க அத்தான். உங்க மனசுல அழுத்திட்டு இருக்கற எல்லாத்தையும் சொல்லிடுங்க.” என்று அவனை வலக்கரத்தால் அணைத்தபடி கேட்டாள்.

“அத்தைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் பூமா அப்போ…” என்று காமாட்சியைப் பார்த்தான். அவர் கண்களில் கண்ணீரோடு தரையை பார்த்த வண்ணம் இருந்தார்.

“தாத்தா வீட்டுக்கு போறதுனாலே சந்தோஷம் தான். காமாட்சி அத்தை இருப்பாங்க, புவிக்குட்டி இருப்பான் அப்படினு ஒரே குஷி தான். ஆனா அடிக்கடி தாத்தாவைப் பக்க வர்ற, தாத்தாவோட தங்கச்சி பொண்ணு நீலா அத்தையை எனக்கு சுத்தமா பிடிக்காது. ஒரு நாள் நீலா அத்தை மகேஷ் மாமா ரூம்ல இருந்து வந்தாங்க, அப்போ காமாட்சி அத்தை அவங்க பிறந்த வீட்டுக்கு போய்ட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டு இருந்தாங்க.

நீலா அத்தையை காமாட்சி அத்தை முறைச்சிட்டு போய்ட்டாங்க. ஆனா அடுத்த கொஞ்ச நாளில் காமாட்சி அத்தை மகேஷ் மாமா கூட சண்டை போட்டாங்க. நீலா அத்தையோட வாழ்க்கை போயிடுச்சு. மாமா தான் காரணம் அப்டினாங்க. மாமா எவ்வளவோ இல்லன்னு சொன்னாரு. அத்தை வேண்டாம்ன்னு போயிருந்தா கூட பரவாயில்லை. இப்போவே நீலா கழுத்துல தாலி கட்டுங்க இல்லன்னா செத்து போய்டுவேன்னு மிரட்டி தாலி கட்ட வச்சிட்டு, இவங்க புவியை கூப்பிட்டு போக பார்த்தப்போ தாத்தா புவியை விட முடியாது, ஆனா அவங்களுக்கும் அந்த வீட்டுக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாரு.

நீலா அத்தை ஏதோ மாமா கிட்ட தனியா பேசினாங்க அடுத்த நிமிஷம் மாமா மயங்கி விழுந்துட்டாரு, ஹாஸ்பிடல் போனா அவருக்கு ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னாங்க. அவரை கவனமா பாத்துக்க சொன்னாங்க. தாத்தாவும் உடஞ்சு போய் படுத்த படுக்கை ஆகிட்டாரு. சொல்லு பூமா. இவங்க மாமாவை நம்பியிருந்தா இவ்வளவு தூரம் நடந்திருக்குமா?”

அப்போதும் அழுத்துக்கொண்டிருந்த காமாட்சியைப் பார்த்த அகிலன் “சொல்லுங்க அத்தை, என்ன தான் நடந்துச்சு? தன்னோட கணவனுக்கு ஒரு பொண்ணு அவளே இன்னோரு கல்யாணம் பண்றதா இருந்தா அங்க பெருசா ஏதாவது இருக்கணும்!”

“ஆமாம் அகி… அன்னைக்கு ரூம் வாசல்ல அவ உடையெல்லாம் கலைஞ்சு, ஒரு மாதிரி இருந்தா. எப்பயும் அவர் மேல் அவ ஒரசிட்டே இருப்பா. அவருக்கு பிடிக்காது. ஒதுங்கி போய்டுவாரு. ஆனா அன்னைக்கு நான் உள்ள போனப்போ அவர் தூக்கத்துல சிரிச்சுட்டே இருந்தாரு. நானும் விட்டுட்டேன். ஆனா ரெண்டு மாசம் கழிச்சு அவ மாசமா இருக்கேன்னு ரிப்போர்ட் கொண்டு வந்தா. கெட்டுப்போன பொண்ணை யார் கட்டுவா? அதான் கெடுத்தவருக்கே கட்டி வச்சேன். தப்பா?”

“அவர் தப்பு பண்ணினார்ன்னு நீ பார்த்தியா?”, என்று கேட்ட கோதையின் குரல் இதுவரை யாரும் கேட்டிறாதது.

“சொல்லு”, என்றாள் அதே குரலில்.

“யாரும் பார்க்க வேண்டாம் கோதை. யோசிச்சாலே போதும்.”

“உங்க யோசனையோட வக்கரம் தான் எனக்கு தெரியுமே! வாய மூடுங்க.”, கர்ஜித்தாள்..

மகேஸ்வரன் கண் திறக்க, சில நலம் விசாரிப்புகளுக்கு பின் அவரிடமும் கேள்விகள் கேட்கப்பட, அவர் ஒரு விரக்தியான முறுவலுடன், “அன்னைக்கு அவ எங்க ரூம்ல வந்து படுத்ததே எனக்கு தெரியாது. கிட்டத்தட்ட ஒரு மாசம் காமாட்சி ஊர்ல இல்ல, அடுத்தநாள் வரப்போறான்னு நான் சந்தோசமா சிரிச்சிட்டே தூங்கினேன். ஆனா அது தான் நான் கடைசியா சிரிச்ச சிரிப்பு. அப்பறம் என் வாழ்க்கை தான் சிரிப்பா சிரிச்சு போச்சு.”

“அப்பறம் நீலா எப்படி கர்ப்பமானா?” கோபமாய் கேட்டார் காமாட்சி.

“என்னை உரசினா நான் தள்ளி போவேன், எல்லாரும் போவாங்களா? அவளோட படிச்சவன் அவளை பலவந்தப் படுத்திட்டான். அவளும் கர்ப்பம் ஆகிட்டா. ஆனா அதை அவ என் மேல திருப்புவான்னு நான் நினைக்கலை. கொடுமை என்னன்னா, முதல்ல அவளும் நினைக்கலை. அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க கேட்க தான் அவளும் போயிருக்கா. ஆனா அவன் ஆக்சிட்டென்ட்ல செத்துட்டான். குழந்தையை கலைக்க முடியாம போகவும் அவளும் புத்தியில்லாம என் மேல பழி போட்டுட்டா. அதனால தான் நான் நர்மதாவுக்காக பொறுமையா இருந்தேன். ஆனா இவ என்னை நம்பாமல் போனதை விட அவளுக்கு தாலி கட்ட சொன்னது தான் கொடுமை.

மாட்டேன்னு எவ்வளவு அழுதேன். ஆம்பளைங்கறதயும் மறந்து அழுதேன். இவ பிடிச்ச பிடில அவ கழுத்துல தாலி கட்ட வச்சிட்டா. இவ போனதும் நீலா காரணத்தை சொல்ல, எனக்கு நெஞ்சே வெடிச்சி போச்சு. அப்போ நீலா சின்ன பொண்ணு இருபது வயசு தான் இருக்கும். ஆனா இவள் பெரியவ தானே? யோசிச்சிருக்க வேண்டாமா?” என்றார்.

அனைவர் கண்களிலும் கண்ணீர்.

“என் இடத்துல இருந்து யோசிச்சு பாத்தீங்களா? நான் அவள் அறையை விட்டு வந்தப்போ பொருட்படுத்தவே இல்லை. ஆனா கர்ப்பம் அப்டின்னு வந்தா நான் என்ன செய்ய முடியும்? என் வாழ்க்கை தான் போச்சு அவளாவது வாழட்டும்ன்னு நினைச்சேன். உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்ன்னு வந்துட்டேன். ” என்று அழுதார்.

அவரின் நிலையும் பரிதாபம் தான். யாருக்கும் யாருக்காக பேசுவது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தனர்.

அந்த அமைதியை சுந்தருக்கு வந்த செல்போன் அழைப்பு கலைத்தது.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர்..”

“அப்படியா?”

“சரி.”

“சீஸ் பண்ணுங்க.”

“வர்றேன்.”

“நார்கோட்டிக் டிப்பார்ட்மெண்ட்ல வர சொல்லுங்க.”

“சரி.” என்றவர்,
“கதிர் கிளம்பு “என்று சொல்லிவிட்டு,

“நீ சொன்னது சரி தான் கோதை. அவன் பார்பஸ்ஸா தான் அவங்கள காலி பண்ண பாத்திருக்கான். நடுக்காடுக்கு மேல இருக்கற இடத்துல கஞ்சா பயிர் பண்ணிருக்கங்க. அதை பேக் பண்ண அங்கே இடம் சரியா இல்லை. நடுக்காடு அடர்த்தியா வெளில தெரியாம இருக்கறதால அந்த இடத்தை பயன்படுத்திக்க தான் அவங்களை துரத்த நினைச்சிருக்கான்.”

“இப்போ அவனை பிடிச்சாச்சா?”

“அவன் யார்னே தெரியலையே!”

“அந்த அட்வகேட் சக்தியை பிடிங்க கண்டிப்பா அந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கும்.” என்றான் ஆதி.

இன்னும் இவர்களுக்கு தெரியாத எவ்வளவோ இருப்பதை உணராமல், பயிரிடப்பட்ட கஞ்சாவை அழித்துவிட்டு, இருந்தவைகளை கைப்பற்றி, அந்த மலைவாசிகளின் நிலம் கையகப்படுத்தப் படாமல் தடுத்துவிட்டு, அவனை பிடித்தால் கடமை முடிந்துவிடும் என்று நினைத்து காவல்துறை.

இன்னும் இரண்டு நாட்களில் கோதையை வீட்டுக்கு அழைத்து போகச் சொல்லிவிட்டார் மருத்துவர். அவளை கீழ் அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்யும் போது தான் ஆதி தன் அன்னை இன்னும் கோவையில் இருந்து வராததை உணர்ந்தான். உடனே அவருக்கு அழைப்பு விடுக்க,

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.”என்று கேட்ட பெண் குரலில் ஆதிக்கு பயம் கிளம்பியது.


6 thoughts on “Amudham 38

  1. இப்பத்தான் அன்னம் என் வரலைங்கிறதே ஸ்ட்ரைக் அவுட் ஆகியிருக்கு போல.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!